நீலகிரி: சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாத காவல் நிலையம், ஈடிவி பாரத் செய்தியின் அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அருகே பழைய கட்டடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. பழமையான கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்தனர். ஆனால், டிரிபிள் ஏ கமிட்டியின் அனுமதி கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவல் நிலையம் திறப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், உரிய அனுமதிகள் விரைவாக கிடைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, பேண்ட் வாத்தியங்கள் முழங்க காவல் நிலைய திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வு, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் வாக்லே முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற நீலகிரி மாவட்ட எஸ்பி சசிமோகன் விளக்கேற்றி காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் சுற்றுப்புறத்தை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அருவங்காடு வியாபாரிகள் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு காவல் நிலையம் திறக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்