நீலகிரி: மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த 21ஆயிரத்து 800 பழங்குடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில், உதகமண்டலத்தில் உள்ள ஜீப் ஓட்டுநர்கள், கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள், கூலித்தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கலந்து கொண்டு கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அத்துடன் கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி போன்ற பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், காட்டு நாயக்கர், பணியர் ,தோடர், கோத்தர், முள்ளுக்குறும்பர் என 6 பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 26 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர்.
பழங்குடியினருக்கு தடுப்பூசி
இவர்களில், கரோனா தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த 21ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்த அவர்கள் வசிக்கும் குக்கிராமங்களுக்குச் சென்று முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
ஆட்சியருக்கு விருது
தற்போது அந்த பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பழங்குடியினர் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தியதற்காக நாளை(ஜூலை 01) மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சிறப்பு விருதினை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிமிருந்து பெற இருக்கிறார் என்றார்.
இதையும் படிங்க: சியான் 60: தடுப்பூசி எடுத்துக்கொண்ட படக்குழு!