ஆசியாவின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிக்க உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வார்கள். இந்தச் சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை மூலம் யானை சவாரி, வாகன சவாரிகள் நடைபெறுகின்றன.
மேலும் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் 26 வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவதை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாத காலமாக இந்த முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மற்ற சுற்றுலாத்தலங்கள் முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் முதுமலை சரணாலயத்தை திறக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் பத்து நிபந்தனைகளுடன் கூடிய அறிக்கையுடன் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று (ஜன.09) முதல் திறக்கப்படும் என அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார். அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்து வரவேண்டும், கண்டிப்பாக முதுமலை புலிகள் காப்பக நுழைவாயில் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
மேலும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் எங்கிருந்து வருகிறார்களோ அதற்கான அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்படும், ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு உள்ளே வரவேண்டும். குறிப்பாக வாகன சவாரி காலை 6:30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இயக்க படும். வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் 50 சதவீதம் மட்டுமே அமர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலுள்ள தங்கும் விடுதிகள், ஓய்வு விடுதிகள் ஜன.11ஆம் தேதிக்கு மேல் மட்டுமே இயங்கும். ஒவ்வொரு அறைக்கும் 2 பேர் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 26 யானைகளுக்கு உணவளிக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமில் 30 சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
காலை 8:30 மணிக்கும், மாலை 6 மணி மட்டுமே இது செயல்படுத்தப்படும். காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் கண்டிப்பாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம் திறப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மணாலி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல்!