நீலகிரி: கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வனத்திலிருந்து வெளியேறும் யானைகள் தேயிலைத் தோட்டங்களிலும், அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செலுக்காடி கிராமத்தில் குடியிருப்பை ஒட்டிய தேயிலைத் தோட்டங்களில் ஒற்றைக் காட்டு யானை உலா வருவது கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிலுக்கு ஆடி கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒய்யாரமாக நடந்து வந்தது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்தனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டு யானை தேயிலைத் தோட்டங்கள் வழியாக வனப்பகுதிக்குள் சென்றவுடன் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
சமீப காலமாக யானை தாக்கி மனித உயிர்கள் பலியாகும் சம்பவங்களும், அடிக்கடி நடந்து வருவதால் யானைகள் நடமாட்டம் பொதுமக்களிடையே உயிர் போகும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக்காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து, ஊருக்குள் வராதவாறு அடர் வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என செலுக்காடி கிராமப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீரன் பட பாணி.. நீலகிரியில் பவாரியா கும்பல்.. வனப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு..