மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அளவில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியே 35 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்துவருகிறது.
அந்தவகையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ. ராசா வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்துவந்தார். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆ.ராசா அபார வெற்றிபெற்றார். ஆ. ராசாவின் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிவருகின்றனர்.
யார் இந்த ஆ. ராசா?
பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் ஆண்டிமுத்துவுக்கும் சின்னபிள்ளைக்கும் 1963 மே 10ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் ஆ. ராசா. முசிறியில் உள்ள அரசு கலைக்கல்லூரில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.எல்., திருச்சி சட்டக்கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பு ஆகியவற்றை நிறைவு செய்தார். இவரது மனைவி பரமேஸ்வரி.
ஆ. ராசாவின் அரசியல் களம்
ஆ. ராசா திமுகவின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர் எனப் படிப்படியாக வளர்ந்து கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்திருக்கிறார். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1996ஆம் ஆண்டு போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து எம்.பி.யானார்.
1998 மக்களவைத் தேர்தலில், மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக ராஜரத்தினத்திடம் தோற்றார். 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு, ராஜரத்தினத்தை தோற்கடித்தார். மீண்டும் இதே தொகுதியில் 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சுந்தரத்தை தோற்கடித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், முதன் முறையாக கடந்த 2009 ம் ஆண்டு நீலகிரியில் போட்டியிட்டார்.
அதிமுக கூட்டணியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கிருஷ்ணனைத் தோற்கடித்து எம்.பி. ஆனார். 2014 மக்களவைத் தேர்தலில் மீண்டும் நீலகிரியில் ஆறாவது அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.
மத்திய அமைச்சராக ஆ. ராசா
நீலகிரி தொகுதியில் தற்போது ஏழாவது முறையாக களமிறங்கியிருக்கிறார். 1996ஆம் ஆண்டு ஊரகத் தொழில்துறை மத்திய இணை அமைச்சராகவும், 2001 - 2004 வரை மத்திய சுகாதாரம், மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சராகவும் , 2004- 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2007- 2009 வரை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குற்றச்சாட்டில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.