நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கால் நலிவடைந்த மக்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருள்களை நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது சார்பில் 100 டன் அரிசி, திமுக சார்பில் 300 டன் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன. பொதுமுடக்கத்தால் முறைசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் கூலித்தொழிலாளர்ககளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை மத்திய, மாநில அரசுகள் கணக்கில் எடுத்து கொள்வதாக தெரியவில்லை. இதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின், கரோனா நிவாரண தொகையாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உலகளவில் திமுக போன்ற எந்த எதிர்க்கட்சியும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடவில்லை என்பதை உணர வேண்டும்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்தலுக்காக அத்தியாவசிய பொருள்களை வழங்குகின்றனர். ஆனால் திமுக மக்களின் நிலை கருதியே வேலை செய்கிறது. நீலகிரியில் மருத்துவக் கல்லூரிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள பணிகளை மாநில அரசே செய்ய வேண்டும். நீலகிரி மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை சோதனை செய்ய முறையான செயல்திட்டம் அரசிடம் இல்லை. கரோனா தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் செயல் திட்டம் ஏதுமில்லை எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், பீலா ராஜேஷ் மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆ.ராசா, அரசு இதற்கு தகுந்த விளக்கம் தர வேண்டும். தான்தோன்றித்தனமாக அரசு செயல்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: 'தண்டையார்பேட்டையில் குணமடைவோரின் விகிதம் அதிகரித்துள்ளது'