நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப காலமாகத் தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டு எருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிக அளவு காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாகச் சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில், சர்வ சாதாரணமாக உலா வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சமாக உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றான வண்ணாரப் பேட்டையில் தன்னுடைய குட்டியுடன் காட்டு எருமை ஒன்று வீதியில் உலா வந்தது. அப்போது வேலைக்குச் சென்று வீடு திரும்பிய முதியவர் ஒருவர் கடையின் முன்னே நின்று கொண்டிருந்த போது, சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு எருமை முதியவரைத் தாக்க முயற்சி செய்தது.
மூன்று முறை முதியவரைத் தாக்கக் காட்டெருமை முயற்சி செய்தும் அதிலிருந்து முதியவர் சாதுரியமாகத் தப்பித்தார். காட்டெருமையின் இத்தகைய செயலை கண்டு அருகிலிருந்தவர்கள் சத்தமிடவே, காட்டெருமை அப்பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் மற்றும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் வன விலங்குகளால் பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. இதே போன்று சில தினங்களுக்கு முன் கூடலூர் நகரச் சாலை குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டுப்பன்றிகள் சாலையைக் கடக்க முயற்சி செய்து முடியாமல் சாலையோரம் நின்றிருந்த நபர் மீது மோதியதில் அந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இவ்வாறு சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அலைந்து திரியும் வனவிலங்குகளால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்க வனத்துறையினர் முனைப்பாகச் செயல்பட்டு, பொதுமக்கள் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: டீ, பிஸ்கட்டுக்கு மாதம் ரூ.30 லட்சம் செலவு செய்த பஞ்சாப் அரசு.. ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!