நீலகிரி கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 27-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டிமரம் உள்ளிட்ட மூன்று முகாம்களில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டுவந்தன.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தெப்பக்காடு, அபயராண்யம் ஆகிய இரண்டு இடங்களில் முகாம்கள் செயல்பட்டன. இதில், தெப்பக்காடு பகுதியில் உள்ள முகாமில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவந்தது. மற்ற இடங்களிலுள்ள முகாம்களுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
பிரதான சாலையோரத்தில் அபயராண்யம் யானைகள் முகாம் இருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி எந்தவித அனுமதியும் இன்றி முகாம்களுக்கு வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் இங்குள்ள யானைகள் பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள முகாம்களில் பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழையில் பாம்பேக்ஸ் முகாமில் மரங்கள் விழுந்து முகாம் சேதமடைந்தது. ஈட்டி மரம் முகாம் தற்காலிகம் என்பதால் அதுவும் மூடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்பட்டன.
இங்கு, அதிக எண்ணிக்கையிலான யானைகளைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதனாலேயே, தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 9 வளர்ப்பு யானைகளை மீண்டும் அபயராண்யம் முகாமில் சேர்த்து பராமரிக்க வனத் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போது மூர்த்தி, வசீம், ஜம்பு, விஜய், இந்திரா, கிருஷ்ணா, சீனிவாசன், சங்கர், இந்தர் ஆகிய ஒன்பது யானைகள் அபயராண்யம் முகாமிற்கு கடந்த இருநாள்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டன.
கடந்த இரண்டு மாதங்களாக முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்து மாயாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் யானைகளை குளிக்க வைப்பதற்கும், பராமரிப்பதற்கும் வசதியாக உள்ளதாக யானைப் பாகன்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் கும்கி யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் தொடங்கியது