நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர்.
இங்கு கடின பயிற்சியை முடித்த இளம் ராணுவ வீரர்களில் 66 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் மற்றும் தேசிய கொடி மீதும், உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.
ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ரெஜிமென்ட் கொடி மற்றும் தேசிய கொடியுடன் கம்பீரமான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் (கமாண்டன்ட் எம் ஆர் சி ) பயிற்சியில் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும், கேடயம் வழங்கப்பட்டது. கரோனா சூழ்நிலையிலும் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கரோனா காரணமாக இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்: குன்னூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!