நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களும் கோடை காலம் என்பதால் இதமான காலநிலையாக இருக்கும். இதனை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், கோடை சீசனின் தொடக்க நிகழ்ச்சியாகவும் ஆண்டுதோறும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது தொடங்கி உள்ள நிலையில் கோடை சீசனின் தொடக்க நிகழ்ச்சியாக 135ஆவது உதகை குதிரை பந்தயம் இன்று தொடங்கியது. இதனைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து செல்வதைக் கண்டு ரசித்தனர். வெற்றி பெறும் குதிரைகளுக்கு கோப்பைகளும், பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.
ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பந்தயத்தில் பங்கேற்க பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து 600 பந்தய குதிரைகள் வந்துள்ளன. 30 ஜாக்கிகள், 30 பயிற்சியாளர்களும் வந்துள்ளனர். முக்கிய பந்தயமான 1000 கின்னீஸ் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியும், 2,000 கின்னீஸ் மே 1ஆம் தேதியும், நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தயம் மே 2ஆம் தேதியும் நடைபெறுகிறது. இளம் குதிரைகளுக்கான போட்டியும் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: சீசன் வரும் முன்பே ஆர்ப்பரிக்கும் குற்றால அருவி..!