தஞ்சாவூர்: கர்நாடக மாநிலம் மைசூரூவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கிருஷ்ணா (27), யோகா பயிற்சியாளரான இவர், நாட்டின் நலனுக்கு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் குறித்தும், மனிதர்களாகிய நாம் அனைவரும் உடல் நோய் நொடியின்றி, ஆரோக்கியமுடன் வாழ யோகா அவசியம் என்பது குறித்தும் பொது மக்களிடமும், பள்ளி மாணவ மாணவியர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்திட, 28 மாநிலங்கள் வழியாக பாதயாத்திரையாக சென்று மீண்டும் மைசூரூ சென்றடைய திட்டமிட்டுள்ளார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி தனது பாதயாத்திரையை மைசூரில் தொடங்கி, தற்போது 60 நாட்களில், 1,500 கி.மீ தூரத்தை கடந்து நேற்று மாலை கும்பகோணம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணன், இந்தியா மாநிலங்களாக பிரிவுபட்டிருந்தாலும், யோகாவால் ஒன்றுபட வேண்டும்.
மேலும் நாட்டின் நலனுக்கு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதுபோலவே மனிதர்களாகிய நாம் அனைவரும் உடல் நோய் நொடியின்றி, ஆரோக்கியமுடன் வாழ யோகா அவசியம் என்பது குறித்து பொது மக்களிடமும், பள்ளி மாணவ மாணவியர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்திட தேசிய கொடியுடன், இந்த பாதயாத்திரையை தனி ஒருவனாக மேற்கொண்டுள்ளேன் என்றார்.
இந்நிலையில் மீண்டும் மைசூரூ சென்றடைய 3 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் இதுவரை யோகா குறித்து தனது பாதயாத்திரை வரும் வழியில் 30 பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சியளித்து விட்டு வந்துள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பின்னர் தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் லோன் பெறுவோர் உஷார்.. தஞ்சை பெண்ணுக்கு நேர்ந்த கதி!