தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மனைவி சந்திரா (39). தனது உறவினர் வீட்டில் துக்கம் அனுசரிக்கச் சென்ற நாடிமுத்து, வீட்டின் பின்புறம் இருந்த போர் செட்டில் குளித்து விட்டு தெரு பக்கம் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சம்பந்தம் இல்லாமல் நாடிமுத்துவிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
‘நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்?’ என்று கேட்டபோது அந்த நபர் நாடிமுத்துவை தள்ளிவிட்டு தான் கொண்டுவந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் தனது வீட்டிற்கு வந்து பார்த்த நாடிமுத்து, பீரோ திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். மேலும் தனது மனைவி சேலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார்.
இறந்துபோன அவரது மனைவியின் கழுத்தில் இருந்த இரண்டு செயின்கள், மோதிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது பின்பு தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
அதன்பின்பு காவல் ஆய்வாளர் பெரியசாமி, நாடிமுத்து வீட்டிற்கு வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க... பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து அறுவை சிகிச்சை: மருத்துவர் மீது கணவர் புகார்!