ராமநாதபுரம் மாவட்டம் தூவிபுரத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே தனது சித்தி வீட்டில் தங்கி, அங்குள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கதிராமங்கலம் மாணிக்கநாச்சியார் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் செல்போனில் பேசத் தொடங்கி, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின், தூத்துக்குடியில் உள்ள அரசுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு பயிற்சிக்குச் சேர்ந்த வெங்கடேஷ், தனது காதலி கனிமொழியையும் இதே மையத்தில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர் காதலன் வற்புறுத்தலின் பேரில் அதே பயிற்சி மையத்தில் ரயில்வே துறை தேர்வு பயிற்சிக்குச் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோயிலில் உறவினர்கள் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். பிறகு கர்ப்பம் தரித்த கனிமொழி, வெங்கடேஷின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து வெங்கடேஷுக்கு பெண் பார்க்கும் தகவல் கனிமொழிக்கு கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், வெங்கடேஷின் பெற்றோர்களைப் பார்த்து முறையிட்டுள்ளார். ஆனால், அப்போது வெங்டேஷின் உறவினர்கள் தாக்க வந்ததால், அங்கிருந்து புறப்பட்டு நேராக காவல் நிலையத்திற்குச் சென்று வெங்கடேஷ் மீது கனிமொழி புகார் அளித்துள்ளார். இருப்பினும் கனிமொழியால் வெங்கடேஷ் இல்லாமல் வாழ முடியவில்லை.
இதனையடுத்து, நேற்று வெங்கேடஷின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கனிமொழி, தனது காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என கத்தியுள்ளார்.
இதனால், அப்பகுதியில் பொது மக்கள் கூட்டம் சேரத் தொடங்கியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா, திருவிடைமருதூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இளம்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை, வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவேன். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் காவலர்களிடம் கனிமொழி தெரிவித்தார்.
கனிமொழியின் பையைக் காவலர்கள் சோதனை செய்ததில், மாத்திரைகள், வங்கி சேமிப்புப் புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்களைக் கைப்பற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டம் நீடித்த நிலையில், காவல் ஆய்வாளர் சுகுணா கனிமொழியை தனியாக அழைத்துச் சென்று இதற்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், விரைவில் இரு தரப்பினரையும் அழைத்து பேச முடிவெடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கனிமொழி தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!