தஞ்சாவூர்: சிவனடியார்களில் ஒருவரான சிறுதொண்டர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவு அளித்த பிறகே, தான் உணவருந்தும் பழக்கத்தை கொண்டு இருந்தார். அவரது இந்த தொண்டை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒருநாள் அவரது வீட்டிற்கு சிவனடியாராக வந்து அவரிடம் இன்று உனது இல்லத்தில் உணவு அருந்த இருப்பதாக கூறுகிறார்.
அவரது எண்ணத்தை அறிந்து அவருக்கு பிடித்த உணவை சமைக்க எண்ணிய சிறுதொண்டர், அவருக்கு என்ன பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு சிவனடியாராக வந்த சிவபெருமானோ தனக்கு பிள்ளைக்கறி வேண்டும் என கூறியுள்ளார். சிறுதொண்டரோ அவரது விரும்பத்தை நிறைவேற்றும் வகையில், தனது ஒரே மகனான சீராளனை கொன்று பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாருக்கு அமுது படையல் அளிக்க ஆயத்தமாக இருந்துள்ளார்.
அந்த வேளையில் சிவனடியார் குளித்து பூஜை செய்து முடித்து விட்டு, இல்லத்தில் உள்ள அனைவரையும் வரச் சொன்ன போது சிறுதொண்டரும், அவரது மனைவியும் மட்டும் வந்துள்ளனர். சிவனடியாரோ எங்கே உன் குழந்தைகள் என கேட்க, இருவரும் செய்தறியாமல் தவித்துள்ளனர். அப்போது குழந்தை இல்லாத வீட்டில் நான் உணவு அருந்த மாட்டேன் என சிவனடியாராக வந்த சிவபெருமான் மறுத்துள்ளார்.
சிறுதொண்டரோ எங்கே சிவனடியார் தன் இல்லத்தில் உணவருந்தாமல் சென்று விடுவாரோ என அஞ்சி தனது ஒரே மகன் சீராளனை, தங்களுக்காக கொன்று சமைத்துள்ள உண்மையை கூறுகிறார். அப்போது சிவனடியார் உன் மகனது பெயரை சொல்லி வாசலில் நின்று மும்முறை கூப்பிடச் சொல்கிறார்.
அவ்வாறே அழைக்கும் போது அவரது மகன் சீராளான் உயிருடன் ஓடி வருவதைக் கணவன், மனைவி இருவரும் கண்டு ஆனந்தம் அடைந்தது உள்ளனர். பின் தங்கள் இல்லத்திற்கு சிவனடியாராக வந்தது சிவபெருமானே என உணர்ந்து மெய்சிலிர்த்து போயினர்.
இந்த புரணத்தை குறிக்கும் வகையில், கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில் அமைந்துள்ள ஆத்தீஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை தினத்திற்கு மறுநாள் நவதாணியங்கள் மற்றும் அரிசி, உளுந்து மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயார் செய்யும் சீராளன் உருவத்தை ஊர்வலமாக கொண்டு வந்து ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் அமுது படையல் நடைபெறுவது வழக்கம்.
குழந்தை பாக்கியம் வேண்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, பல வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்காண பெண்கள், இங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் வேண்டி, ஆத்தீஸ்வரரை தரிசனம் செய்கின்றனர். மேலும் அங்குள்ள சிவனடியார்களிடம் சேலை தலைப்பில் அமுது படையல் பிரசாத உணவை மடிப்பிச்சையாக பெற்றுக் கொள்வர்.
பின்னர் அவற்றை அங்குள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வாயில் ஊட்டியும், எஞ்சியதை தானும் பிரசாதமாக அருந்துவர். இந்த விழாவின் இறுதியில் சீராளன் உருவத்தில் இருந்து ஒரு பகுதியை பிரசாதமாக வீட்டிற்கு வாங்கி சென்று கணவன், மனைவி இருவரும் தொடர்ந்து 3 தினங்களுக்கு காலை வேளையில் குளித்து விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது 106-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் சீராளன் ஊர்வலத்துடன் துவங்கி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 200 மூட்டை அரிசி மற்றும் நான்கு டன் காய்கறிகள் கொண்டு தயார் செய்யப்பட்ட அமுது படையலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
அதுபோல குழந்தை பேறுக்காக பிராத்தனை மேற்கொண்ட நூற்றுக்கணக்காண இளம் பெண்கள் 30க்கும் மேற்பட்ட சிவனடியார்களிடம் சேலை தலைப்பில் வாழை இலை வைத்து, அதில் அமுது படையல் உணவை, மடிப்பிச்சையாக வாங்கி சிறுகுழந்தைகளுக்கு அதை ஊட்டியும், தானும் சாப்பிட்டனர். பிறகு கோயிலில் வழங்கப்பட்ட சீராளன் பிரசாதத்தை பெண்கள் தங்களது வீடுகளுக்கு பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: அதிமுக கொடி சர்ச்சை! ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதும் அடுத்த களம்! என்ன நடக்கப் போகுதோ?