தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள வல்லத்தை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (40). வெல்டிங் தொழிலாளியான இவர் சிட்டி யூனியன் வங்கியில் சென்ற 2015 ஆம் ஆண்டு வீடு கட்ட ரூ. 9 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
இந்தக் கடன் தொடர்பாக வங்கி சார்பில் ஆனந்துக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனிடையே வங்கிக்கு சென்ற ஆனந்த் ரூ. 3 லட்சத்தை செலுத்துவதாக கூறி உள்ளார்.
இதனை ஏற்காத வங்கி அலுவலர்கள் வட்டியுடன் முழு தொகையையும் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். மேலும் தவறும்பட்சத்தில் வீட்டை ஜப்தி செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் (ஆக.27) மாலை கடன் வாங்கிய வங்கி வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதையடுத்து உடல் கருகிய நிலையில், அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (ஆக.29) மருத்துவமனையில் ஆனந்த் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே அவர் தற்கொலை செய்துக் கொண்ட வங்கி முன்பு அதன் அலுவலர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விவசாயிகள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு - விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!