தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், வண்ணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இறந்தவர்களின் உடலை, அருகே உள்ள கோவிந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் மயானத்திற்கு எடுத்துச் செல்வது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில், மயானத்திற்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை சுமந்து கொண்டு, ஆபத்தான வகையில் ரயில்வே தண்டவாளத்தை குறுக்காகக் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், மயானத்திற்கு அருகே உள்ள சாலை முறையாக இல்லாமல், சீரற்று பழுதடைந்த ஒத்தையடிப் பாதையாக உள்ளது.
இது மட்டுமல்லாது, மழைக் காலங்களில் இந்த ஒத்தையடி பாதை சேறு நிறைந்த பகுதியாக இருப்பதால், எப்போது சேற்றில் வழுக்கி விழுவோமோ என்ற பயத்துடனேயே இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலையும் நீடிக்கிறது.
இத்தகைய சூழலில், பல ஆண்டுகளாக இந்த சாலையைச் சீரமைத்துத் தர இப்பகுதி மக்கள் கோவிந்தபுரம் ஊராட்சி மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர், திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த இரு நாட்களாக திருவிடைமருதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.6) புத்தகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற ஊழியர் வில்வநாதன் (68) காலமானார்.
இதனை அடுத்து, வில்வநாதனின் உடலை புத்தகரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தைக் குறுக்காகக் கடந்தும், முற்றிலும் சேறும் சகதியும் நிறைந்த குறுகிய சாலை வழியே ஆபத்தான முறையில் அவரது உடலைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பல ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்னையினை உடனடியாக தீர்க்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு, மயானத்திற்குச் செல்லக் கூடிய பாதையை சீரமைத்து, முறையான சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் மாணவர் குறைதீர்ப்பாளராக ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நியமனம்!