தஞ்சாவூர்: வெண்ணாற்றங்கரையில் உள்ள நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள் தனித்தனி கோயில்களில் அருள்பாலிக்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் 3 கோயில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.
இவை தஞ்சையின் மாமணிக்கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் நீலமேகப் பெருமாள் கோயிலில் மூலவரான நீலமேகப் பெருமாள், அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவி செங்கமலவல்லி தாயார், இந்த பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றி வழிபாடு நடக்கிறது.
இக்கோயிலில் உற்சவர்களுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தஞ்சையில் நடைபெறும் 24 கருடசேவையின் போது நீலமேகப் பெருமாள் ஆண்டாளுடன் கருடசேவையில் முதலாவதாக வருவது தனி சிறப்பாகும். இக்கோயிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதி, நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமி இக்கோயிலில் பிரகாரத்தில் நரசிம்மரின் வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.
இந்த நரசிம்மர் வலவந்தை நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். அசுரனை அழித்த நரசிம்மர் கோபம் தணியாமல் இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை என்பதால் மகாலட்சுமி நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்து கொண்டாள் என்பதே இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். அதிகமாக கோபப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி மன அமைதி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வைகாசி பிரமோற்சவம் கடந்த மே 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.
மேலும், மாலை உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம், அன்னபட்சி வாகனம், தோளுக்கினியானில் புறப்பாடு, கருட சேவை, சேஷ வாகனம், கஜ வாகனம் ஆகியவை செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு (மே 31) திருக்கல்யாணம் ஸ்ரீ செங்கமல வல்லி, தாயார் சமேத ஸ்ரீநீலமேகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுவாமிகளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்து பட்டாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க பூஜைகள் செய்யப்பட்டு யாகம் வளர்த்து சுவாமிக்கு கன்னிகாதானம் செய்து மாங்கல்ய தாரணம் மற்றும் பூர்ணாஹதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் குதிரை வாகனம், திருத்தேர், தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.