தஞ்சையில் அதிமுக மண்டல தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பிரிவு கையேடு மற்றும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கூட்டத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் வினோபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அவர், ”அதிமுக அரசின் சாதனைகளை இளைஞர்கள் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் தேவையில்லாதவற்றை பதிவுசெய்து வருகின்றனர். ஒன்பது ஆண்டுகாலம் என்ன சாதனை செய்தோமோ அதனை எடுத்து சொல்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் தேவையானவற்றை மட்டும் பதிவு செய்து தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிசான் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும், சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும் அவர் வெளியே வரட்டும் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.