தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, உத்தமதானி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 2 டன் 235 கிலோ புகையிலைப் பொருட்களான குட்கா, பான்பராக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம், உத்தமதானி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை பெருமளவில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விநியோகம் செய்வதாக சோழபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், சோழபுரம் போலீசாருடன் இணைந்து உத்தமதானி கிராமத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய இந்த சோதனையில், ஒரு வீட்டில் 100 மூட்டைகளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 2 டன் 235 கிலோ அளவிற்கு புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “சமூக வலைதளப்பதிவிற்காக பாஜகவினரை கிரிமினல் போல் நடத்துகிறார்கள்” - பாஜக மத்திய குழு
இதனையடுத்து, போலீசார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இதனை பதுக்கி வைத்திருந்த துவரங்குறிச்சியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மற்றும் கடிச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வாடகை வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் இரண்டு ஸ்கூட்டர்களையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: “தமிழகத்தில் புதிதாக போதை ஒழிப்பு காவலர்கள் பிரிவை உருவாக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்