தஞ்சாவூர்: தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் சிகிச்சை முடிந்த பிறகு, உள் நோயாளிகளாக தங்குவதற்காக 300 படுக்கை வசதிகள் உள்ளன.
தஞ்சை மட்டுமின்றி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவசர சிகிச்சை, முதியோர் உள் நோயாளிகள், எலும்பு முறிவு உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. மேலும் புதிதாக இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவமனை நுழைவாயில் பகுதி பழமையான கட்டடம் ஆகும். மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், நுழைவாயில் பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்ததில், நோயாளிகளின் உறவினர்களான தஞ்சையை சேர்ந்த கார்த்தி, பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள் நோயாளிகளை பார்க்க விரும் உறவினர்கள் மற்றும் புற நோயாளிகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே மருத்துவமனைக்குள் செல்ல முடியும். எனவே அவர்கள் மரத்தின் நிழல், கட்டடத்தின் நிழலின் தான் உட்கார வேண்டியுள்ளது. ஆனால், மருத்துவமனை கட்டடம் பழுதடைந்த நிலையில் காட்சியளிப்பதால் அச்சத்துடனே அமர வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்தில் இதேபோல் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, சிதிலமடைந்த கட்டடத்தை சீரமைக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மொத்தம் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. கொரனோ பாதிப்பு காலத்தில் இரண்டு நுழைவாயில்கள் மூடப்பட்டு ஒருவழி பாதை மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த பிறகும், ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ்களும், சுற்றி வர வேண்டியுள்ளதாக நோயாளிகள் கூறுகின்றனர். எனவே, மீதமுள்ள 2 நுழைவு வாயில்களையும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.