தஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு வரை செல்லும் தனியார் பேருந்து நேற்று முன்தினம் (ஜூன் 01) மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிக வேகத்தில் வந்ததாகத் தெரிகிறது. அப்போது, அப்பகுதியில் வசிக்கும், ஜல்லி சீனிவாசன் என்பவர் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை சாலையில் இறங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த தனியார் பேருந்து, முன்னாள் சென்ற மினிப்பேருந்தை வேகமாக முந்தி கடந்தபோது, வீட்டில் இருந்து சாலையில் இறங்கிய இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் வந்து திடீரென பேருந்தை ஓட்டுநர் பிரேக் அடித்து நிறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசனின் மகன் அகின் மற்றும் அவனது நண்பன் கார்த்திக் ஆகியோர் பேருந்தின் பின் பக்கம் வேகமாக தட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பேருந்து நடத்துநர் முருகன் மற்றும் ஓட்டுநர் சரத்குமார் ஆகிய இருவரும் பேருந்தை தட்டியவர்களிடம் இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஆத்திரமடைந்த அகின் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதற்கிடையே, பேருந்தின் ஓட்டுநர் சரத்குமார் மற்றும் நடத்துநர் முருகன் தாங்கள் இருவரும் தாக்கப்பட்டதாக கூறி, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிழக்கு காவல் துறையினர் பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அகின் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் 17 வயதான மைனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் மாநகரப் பகுதியில், குறிப்பாக நெருக்கடி மிகுந்த பகுதிகளிலும், பயணிகளைப் பிற பேருந்துகளுக்கு முன்னதாக தங்களது பேருந்தில் ஏற்றிட வேண்டும் என்ற ஒரே நோக்கில், பெரும்பாலான தனியார் பேருந்துகள் மற்றும் மினிப் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குரத்து மற்றும் காவல் துறையினர் இணைந்து, மாநகருக்குள் குறிப்பிட்ட வேகத்திற்கும் மேலாக இயக்கப்படும் பேருந்துகள், மினி பேருந்துகள் ஆகியவற்றைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கும்பகோணம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: தேனி ஜவுளிக்கடை விவகாரம்: கடை ஊழியர்கள் தர்ணா புரியும் பெண் மீது புகார்!