தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பிஎஸ்என்எல் குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ் (46). இவருக்கு அடையாளம் தெரியாத மோசடி கும்பல் ஒன்று டாடா கேப்பிட்டல் என்ற நிறுவன லோகோவுடன் ஆன்லைன் மூலமாக அனுகியுள்ளனர். மேலும், சுரேஷுக்கு கடன் தருவதாகவும் அவரது ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ, வங்கி பரிவர்த்தனை விபரங்களை செல்போன் மூலம் கேட்டுள்ளனர். பின்னர், 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் லோன் வழங்க தகுதி உடையராக தாங்கள் இருப்பதாக அந்த மோசடி கும்பல் சுரேஷிடன் கூறியுள்ளது.
இதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சுரேஷ், லோன் வேண்டும் என கூறியுள்ளார். உடனே அந்த மோசடி கும்பல், சுரேஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடன் விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுது. பின்பு அவரது வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய் 25ஆயிரம் இருக்க வேண்டும், அப்போதுதான் லோன் கிடைக்கும் எனக் கூறி, சரிபார்ப்புக்காக சில விபரங்கள் கேட்பதாகவும் கேட்கும் விபரங்களை மட்டும் கூறுங்கள் உடனே லோன் கிடைத்துவிடும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
தொடர்ந்து, சுரேஷிடம் ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண், ஏடிஎம் முடிவடையும் தேதி, மற்றும் கார்டின் CVV எண் ஆகியவற்றை கேட்டு, இரண்டு முறை ஓடிபி வர அதனையும் கேட்டுப் பெற்றுள்ளனர். பிறகு சுரேஷின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ
24ஆயிரத்து 955 பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் உடனடியாக அந்த கும்பலுக்கு தொடர்பு கொண்டார்.
ஆனால், அந்த கும்பலிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை, இதனையடுத்து சுரேஷ் சைபர் கிரைம் இணையதளம் மூலம் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி புகார் அளித்தார். ஜூலை 1ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார் சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி, மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத், ஆகியோர் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து கண்காணித்ததில் அவர்கள் அரக்கோணத்தில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் அரக்கோணம் விரைந்து சென்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திசன் (34) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (34) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 42 செல்போன்கள், 37 சார்ஜர்கள், பயன்படுத்தப்படாத 19 சிம்கார்டுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 21 சிம் கார்டுகள், பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய விபர நோட்டுப் புத்தகங்கள் 13, ஆகியவற்றை கைப்பற்றினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இதே முறையில் நூற்றுக்கணக்கான நபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. 17 மாவட்டங்களில் 31 புகார்கள் இணைய தளம் வாயிலாக பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் இருவரும் ஏற்கனவே கொலை மற்றும் பண மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் எனவும் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்... எய்ம்ஸ் மாணவர் உள்பட கும்பல் கைது! டெல்லி போலீசார் அதிரடி!