திருவையாறு அடுத்த திங்களூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் தினேஷ் (23). அதே தெருவில் பக்கத்து வீட்டில் வசித்துவருபவர் சசிகுமார் (32). சம்பவத்தன்று தினேஷ், சசிகுமார் மனைவியை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட சசிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் இணைந்து, தினேஷையும் அவரது தந்தை நாகராஜையும் தகாத வார்த்தையால் திட்டியதுடன், அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த தினேஷ், நாகராஜ் ஆகிய இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தினேஷ் கொடுத்தப்புகாரின்பேரில் திருவையாறு உதவி காவல் ஆய்வாளர் ஞானமுருகன், குற்றஞ்சாட்டப்பட்ட சசிகுமார், முத்தழகன், மருதமுத்து, ரெங்கராஜ், மலர்மதி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சசிகுமார், ரெங்கராஜ் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.
இதனிடையே, சசிகுமாரின் தாய் மலர்மதி (50), தினேஷ் அவரது தந்தை நாகராஜ் ஆகிய இருவரும் தன்னை அடித்து காயப்படுத்திவிட்டதாக திருவையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் தினேஷ், நாகராஜ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. தற்போது, காயமடைந்த மலர்மதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து உயிரிழப்பு!