தஞ்சாவூர்: புதுடெல்லியில் உள்ள, பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்களுக்கு ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் அமைக்க மத்திய அரசின் இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் உலகின் பெரிய நடராஜர் சிலை நிறுவப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலைகளில் ஒன்றான இதனை கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீ.P.கண்டன், மற்றும் தேவ.சுவாமிநாதன் சகோதரர்கள் மற்றும் சக ஸ்தபதிகளின் உதவியோடு சுமார் ஆறு மாத கால உழைப்பில் இச்சிலையை வடிவமைத்துள்ளனர்.
தற்போது இச்சிலையின் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவரும், பேராசிரியருமான ஆச்சால் பாண்டியா தலைமையில், மைய அலுவலர்களான ஜவகர் பிரசாத் மற்றும் மனோகன் தீட்சத் ஆகியோர் கொண்ட குழுவினர், மிகப்பெரிய கனரக வாகனத்தில் சாலை மார்க்கமாக சுவாமிமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புதுடெல்லியை நோக்கி பயணப்பட்டது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் கலாச்சார துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, சோழர் கால பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல வெளிநாட்டு முக்கிய தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால் பாதுகாப்பு பணிகளின் கருதி, இச்சிலை பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே புதுடெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
எஞ்சிய 25 சதவீதப்பணிகளை மேற்கொள்ள, சுவாமிமலையில் இருந்து 15 ஸ்தபதிகள், புதுடெல்லிக்கு சென்று, அந்தச் சிலையை முழுமையாக வடிவமைக்க உள்ளனர். இந்த பிரமாண்டமான நடராஜர் சிலை 28 அடி உயரமும், 21 அடி அகலத்தில், சுமார் 25 டன் எடையில், வெண்கலத்தால் அமைந்துள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 10 கோடியாகும். மேலும் இது உலகிலேயே 28 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல், மிகப் பெரிய வெண்கல நடராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.