தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு. அதே நேரத்தில் அவரது தலைக்கு விலை பேசுவது காட்டுமிராண்டித்தனம். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டாகப் பேசியுள்ளார்.
சனாதன தர்மம் பற்றி என்னவென்று தெரியாமல் பேசி இருக்கிறார். குறிப்பாக இந்துக்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறுகிறார். தற்போது தீண்டாமை இல்லை, சமத்துவம் உள்ளது. இவர்கள் அரசியல் செய்வதற்காகப் பேசுகின்றனர். அரசியல் நாகரிகம் இல்லாமல் மதங்களை, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் வேறு ஆட்சி இருந்தால், இந்நேரம் இவர் மீது வழக்குப் போட்டிருப்பார்கள்.
சனாதான தர்மம் என்பது இந்து மதத்திற்கு மட்டும் பொதுவானது அல்ல, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. சனாதனத்தை ஒழிப்பேன் என்றால், அனைத்து மதங்களையும் ஒழிப்பேன் என்கிறார். உதயநிதி பேசியது அடுத்தவர்களின் உணர்வுகளைத் தூண்டுவதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் உள்ளது. அதை அவர் திரும்பப் பெற வேண்டும்.
மேலும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையில் சாத்தியமில்லாதது. செலவைக் குறைக்க வேண்டுமென்றால், தற்போது தேர்தல் நடந்த மாநிலங்களில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் செலவு இன்னும் அதிகமாகும். எதைச் செய்தாலும் தங்களுக்கு அறுதி பெரும்பான்மை இருக்கிறது என்ற காரணத்தால் செய்யக் கூடாது. மக்களின் கருத்துக்களைக் கேட்டுச் செய்ய வேண்டும்.
கடைமடைப் பகுதிகளில் குறுவை, சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும், வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பது கடந்த கால வரலாறு.
அந்நிய செலவாணி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற முடிவுவின்படி நடப்போம். தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் தவறானது என போராடி வருவதாகவும், அது சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அமமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டுயிடும், எங்களைப் பொறுத்தவரை தீயசக்தி, துரோக சக்தி ஒழிக்கப்பட வேண்டும்" என்று குற்றம் சாட்டினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அமமுக துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.