தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள நாடியம் கிராமம் கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அப்பகுதியில் மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்ட நிலையில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அக்கிராமத்து இளைஞர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவது என்று முடிவு செய்தனர்.
அதன்படி, முதற்கட்டமாக கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்களுடன் மரக்கன்றுகளையும் இலவசமாக இளைஞர்கள் வழங்கி, அதை ஒவ்வொருவர் வீட்டிலும், தோட்டங்களிலும் நட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
மேலும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்கும், நீர் மேலாண்மை வளர்ச்சிக்கும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கிராமத்து கோயில் திருவிழாக்களில் நடைபெறக்கூடிய ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதை மூன்று வருடங்களுக்கு நிறுத்திவைத்து அந்தத் தொகையைக் கொண்டு இப்பணிகளை செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.