தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பிஜேபி வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி, பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலமெல்லாம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் இருந்தனர். விவசாயிகளின் அச்சத்தையும், துன்பத்தையும் போக்குவதற்காகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமல்லாது நீர்மேலாண்மை என்னுடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டம் என்னவென்று தெரியும்.
கர்நாடகாவிலிருந்து போராடித்தான் காவிரியில் தண்ணீரை பெற்று வரும் நிலை இருந்து வந்தது. அதுவும் கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு இருக்கும் உபரி நீர் மட்டும்தான் நமக்கு தரப்பட்டது. அந்த நிலைமையை மாற்ற ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டப் போராட்டம் நடத்தி மரணம் அடைந்தார்.
தற்போது நடைபெறும் அவருடைய ஆட்சியில்தான் காவிரியில் நமக்கு சட்டபூர்வமாக தண்ணீர் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் காவிரியில் கலக்கும் மாசுபடிந்த நீரினால் பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு ரூ. 10 ஆயிரம் கோடியில் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை பிரதமர் மோடியின் மூலம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை இந்த அரசுதான் முன்னெடுத்து செல்கிறது. ரூ.80 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய திட்டமாக செயல்படுத்தப்பட்ட உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், காவிரியில் தண்ணீருக்கு குறைவே இருக்காது. இந்த ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கிறது. தமிழ்நாடு விவசாயிகளுக்கு சாகுபடி செய்வதற்குத் தண்ணீர் பெற்றுத் தருவதுதான் இந்த அரசின் லட்சியம் . இந்த ஆண்டு வறட்சி காலத்தில் நிவாரணமும், மழை பாதிப்பு காலத்தில் நிவாரணமும் வழங்கப்பட்டது என்றார்.