தஞ்சாவூர்: நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமாகப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் 7ஆம் நாளான நேற்று (டிச.8) இரவு நாகநாதசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
பல பெருமைகளை கொண்டுள்ள தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 06ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம் ஐந்து தலை நாகம், கைலாச வாகனம், எனப் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 7ஆம் நாளான நேற்று இரவு நாகநாதசுவாமிக்கும், பிறையணியம்மன் மற்றும் கிரிகுஜாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருமணம் யாகம் வளர்த்து, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து 9ஆம் நாளான நாளை (டிச.10) காலை திருத்தேரோட்டமும், பின்னர் 10ஆம் நாளான 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு இரண்டு மணியளவில் திருக்கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி வாகனங்களில் ஒரு சேர எழுந்தருள உள்ளனர். தொடர்ந்து அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பட்ட பிறகு, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அண்ணாமலையார் கோயில் தெப்ப திருவிழா - 2ஆம் நாள் பராசக்தி அம்மன் ஊர்வலம்