தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் வேளாண் அலுவலர்களோடு குறுவை சாகுபடி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது, “தமிழ்நாட்டிற்கு விந்திய மலை, மேற்கு தொடர்ச்சி மலை அரணாக இருப்பதால் வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்பில்லை. தற்போது காற்றின் திசை என்பது கிழக்கு நோக்கி உள்ளது. மேலும் ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு தான் வெட்டுக்கிளிகள் செல்லுமே தவிர தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை.
அதுபோல தமிழ்நாட்டில் 250 வகையான வெட்டிக்கிளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளாகவே உள்ளன. டெல்டா மாவட்டங்களில் தற்போது வரை தேவையான அளவிற்கு உரம் மற்றும் விதைகள் கையிருப்பு உள்ளன. நடப்பாண்டு 5 லட்சம் மெட்ரிக் டன் குறுவை பருவத்தில் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்தி உற்பத்தி என்பது இந்த ஆண்டு 500 ஏக்கர் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1700 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த ஆண்டு 2100 ஏக்கர் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி கொள்முதலுக்கு இந்திய பருத்தி கழகம் டெல்டா மாவட்டங்களில் தன்னுடைய மையத்தை திறந்து கொள்முதல் செய்ய உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நாப்கின் வாங்க காசுல்லாமதான் சிரமப்பட்டோம்' - வலியுடன் போராடிய பெண்களுக்கு உதவிய மனிதநேயர்கள்!