தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். பொறியியல் பட்டதாரியான இவர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒரத்தநாட்டில் செயல்படும் தனியார் கொரியர் சேவை மையத்திலிருந்து அறிவழகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களுக்கு பார்சல் வந்திருப்பதாகவும், உடனடியாக வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
அறிவழகன் வேலையின் காரணமாக தனது தந்தை கருணாநிதியை போய் வாங்கி வர அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவரின் தந்தை கருணாநிதி போய் பார்சலை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார்.
நேற்று காலை அறிவழகன் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் வெடிப்பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் கொண்டு போய் தனியாக வைத்துவிட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சையிலிருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை சோதனை செய்த பிறகு அது ஜெலட்டின் குச்சிகள் என்றும், இது வெடித்திருந்தால் 15 முதல் 20 அடி வரை பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், இது கிணறு தோண்டவும், பாறைகளை வெடிக்க வைப்பதற்கும் பயன்படுத்த கூடிய பொருள் என அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வெடிபொருட்களை செயலிழக்க செய்து பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிவழகன் பெற்றோர் கூறுகையில், எல்பின், அறம் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளான ரமேஷ் மற்றும் ராஜா அவர்கள் தான் இதை அனுப்பி இருப்பார்கள் என புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் 54 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாகவும், தற்போது அந்த பணத்தை திருப்பிக்கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலரிடம் கடந்த 5ஆம் தேதி புகார் தெரிவித்து இருந்தோம், அதனால் தான் தங்களை மிரட்டுவதற்காக இந்த வெடிபொருட்களை அனுப்பி இருக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்தனர்.