தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தியாகிகள் இரணியன், சிவராமன், ஆறுமுகம், வெங்கடாசலம், ஆகியோரின் வரலாறு குறித்த ஆவணப்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் பேசியது, ''தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பக்கூடிய முறையில் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் நிலவுகின்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளுநராக பொறுப்பேற்க வேண்டிய அவர், போகிற போக்கில் பல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்.
ஆளுநர் தமிழ்நாடு அரசின் தலைவர். அவருக்குச் சட்டம் வகுத்து இருக்கிற வரம்புகளுக்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். ஆனால், ஆளுநர் அந்த வரம்புகளை எல்லாம் மீறி அரசியல்வாதியைப் போலவும், ஆர்எஸ்எஸ் அடிமட்ட தொண்டனைப் போலவும் ஆளுநர் பதவியை வகுத்துக் கொண்டு பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது'' என்று தெரிவித்தார்.
மேலும், ''தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் ரூபாய் 3000 கோடி சொத்துகளை பெற்றிருக்கிறோம் என்ற உரையின் மீது சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது என்று சொல்வது மட்டுமல்ல, இந்த அரசு வேண்டுமென்றே ஆன்மிகவாதிகளை காயப்படுத்துகிற வகையில் செயல்படுகிறது என்று சொல்வது, சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டிக்கின்ற முறையில் பேசுகிறார்.
இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றிய அரசு தான், ஆளுநரைப் பற்றி ஏராளமான புகாரை கொடுத்த பிறகும், ஆளுநரை கட்டுப்படுத்த மறுக்கிறார்கள். மாறாக பாஜக இல்லாத மாநிலங்களில் ஆளுநரைப் பயன்படுத்துகிற மாதிரி இங்கு திமுக ஆட்சிக்கு தலைவலி கொடுப்பதற்கு ஆளுநரை பயன்படுத்துகிறார்கள்'' என்று பகிரங்க குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சியில் வாசுகி, சீனிவாசன், நீலமேகம், பழனிவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 'தாய்மை நூலகம்' திறப்பு - கர்ப்பிணிகள் வரவேற்பு!