தஞ்சாவூர் பிரதான சாலையான காந்திஜி சாலையில் எல்ஐசி வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் அடித்தளத்தில் யூனியன் வங்கி, மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சுதந்திர தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு (ஆக.16) திடீரென வங்கியின் உள்ளே இருந்து புகை வருவதைக் கண்ட காவலாளி உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வங்கி பூட்டியிருந்ததால் உள்ளே செல்ல முடியாமல், பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை உடைத்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருந்தும் தீயை அணைக்க முடியவில்லை.
வங்கியின் சாவி மேலாளரிடம் இருந்ததால் தீயனைப்புத் துறையினர் உள்ளே செல்வதில் சிக்கல் இருந்தது. பின்னர் 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வங்கியில் இருந்த ஏசி, கணினி ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாயின. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பல கோடி மதிப்பிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், வங்கியின் காசாளர் அறை மட்டுமே மின் கசிவால் எரிந்திருப்பதும், எந்த ஆவணங்களும் பணமும் எரியவில்லை என தெரியவந்துள்ளது. தீயை அணைத்த பிறகு உள்ளே சென்ற வங்கி ஊழியர்கள், ஆவணங்ளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றினர்.
இதையும் படிங்க:கர்நாடகா பேருந்து தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு