தஞ்சாவூர்: மதுரையைச் சேர்ந்த டைரக்டர் வீரமுருகன் ‘கிடுகு’ என்னும் புதிய படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தஞ்சையை சேர்ந்த திருநங்கை தர்ஷினி நடித்துள்ளார். திருநங்கை சத்யா கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது மகள் தர்ஷினி (28).
'கிடுகு' படத்தில் தஞ்சையை சேர்ந்த திருநங்கை தர்ஷினி காளி என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து தர்ஷினி கூறுகையில், “சனாதன தர்மத்தை காப்பது தான் எங்களின் நோக்கம். சங்ககாலத்தில் திருநங்கைகளை சாமியாக பார்த்தார்கள். ஆனால், இப்போது ஆபாசமாக பார்க்கிறார்கள். நாங்களும் சனாதன தர்மத்தை காப்போம் என்று இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன்.
திருநங்கைகளுக்கு பல்வேறு திறமைகள் இருந்தாலும், அவற்றிற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆதரவு இல்லை ஆகையால் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்” என தெரிவித்தார். இதனிடையே இந்த படத்தில் வரும் வசனத்தை பேசிக்காட்டினார், "மனுதர்மத்தின் அடிப்படையில் உனக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது, தவறு செய்பவர்கள் அனைவருக்கும் மனுதர்மத்தின் அடிப்படையில் மரண தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.
நடிப்பதற்கு உதவி செய்த தனது அம்மா சத்யாவிற்கும், டைரக்டர் வீரமுருகனுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இந்தத் திரைப்படம் வரும் 26ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முருங்கைக்காய் ரகசியத்தைப் போட்டு உடைத்த பாக்யராஜ்!