தஞ்சாவூர் சமுத்திரம் ஏரி கரையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து பொதுப்பணித் துறையினர் இவற்றை இடிக்கும் பணியை தொடங்கினர். சிவன் கோயிலும் சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி பொதுப் பணித் துறையினர் இடிக்கத் தொடங்கினர்.
இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், இக்கோயிலைச் சேர்ந்த பத்மாவதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2018 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில், பத்து வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதனை அடுத்து பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்து முன்னணியினர் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோயில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கோடாட்சியர், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் திடீரென கோயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அலுவலர்களும் இந்து முன்னணியினரும் சம்பவ இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.