மதுரை: தஞ்சையை அடுத்த மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை, செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடக் கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நேற்று (ஜனவரி 24 ) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," நேற்று முன்தினம் (ஜனவரி 23 ) மாணவியின் பெற்றோர் நேரில் ஆஜராகி நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்தார் என தெரிவிக்கப்பட்டது. சீலிட்ட கவரில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை நீதிபதி படித்தார். அதன் பின்னர், "அந்த வீடியோவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசுத்தரப்பில்," பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், செவிலியர் உட்பட 37 சாட்சிகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 14 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. யூடியூபிலேயே அந்த வீடியோ உள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை" என தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும்" என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி, பெற்றோரின் வாக்குமூலத்தில், மாணவி பேசிய வீடியோ பதிவின் சிடி காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத்தரப்பில்," பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை. அதன் மூலமாகவே உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "சிடியில் பதிவு செய்யப்பட்ட வீடியோவைக் கொண்டு, அது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்யலாமே? எனக் கேள்வி எழுப்பினார்.
அரியலூர் மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு அறிவுறுத்தல்
இதனையடுத்து மாணவியின் தந்தையிடம் யார் வீடியோ எடுத்தது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு முத்துவேல் என்பவரே வீடியோ எடுத்தார் என பதிலளிக்கப்பட்டது. அவர் எங்கிருக்கிறார்? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, தெரியவில்லை என முருகானந்தம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் இருந்தால் மட்டுமே வழக்கை விரைவாக விசாரிக்க இயலும் என தெரிவித்தார். மேலும், நீதிபதி, செல்போனில் மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் அந்த செல்போனுடன் வழக்கை விசாரிக்கும், துணை காவல் கண்காணிப்பாளர் முன்பாக இன்று (ஜனவரி 25) ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டார்.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - அன்பில் மகேஷ்
இதனையடுத்து நீதிபதி," மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை விசாரணை அலுவலர் பிருந்தாவிடம் வழங்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது. வீடியோவில் உள்ளது மாணவியின் குரல் தானா? என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை.
ஆகவே, அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் இன்று (ஜனவரி 25) காலை 10 மணிக்கு வல்லம் கேம்ப் அலுவலகத்தில் ஆஜராகி, அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை சமர்ப்பிக்க வேண்டும். மாணவியின் பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
விசாரணை அலுவலர் மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் அலுவலகத்திற்கு செல்போன், வீடியோ பதிவு உள்ள சிடி ஆகியவற்றை வழங்கி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து, வியாழக்கிழமை (ஜனவரி 27) மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை (ஜனவரி 28) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க: ஆன்லைன் தேர்வு: மாணவர்களின் உயர் கல்வியைப் பாதிக்கும் - கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி