தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மேலகொற்கையில் வசிப்பவர் பாண்டியன் (50). கோவையில் ஓட்டலில் வேலை செய்து வரும் இவருக்கு வசந்தி (35) என்ற மனைவியும், சந்தோஷ் (18), சந்தியா (14) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் கோவையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். சந்தியா 9ஆம் வகுப்பு படிக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்ற சந்தியா வீட்டிற்கு வராமல் அதே பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் 18ஆம் தேதி அவரது வீட்டிற்குச் சென்றபோது முன்பக்க கதவு தாழ்ப்பாள் போட்டிருந்தது. இதனால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது சந்தியாவின் தாய் வசந்தி, உடல் முழுவதும் ரத்தத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பட்டீஸ்வரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாண்டியனின் சித்தப்பா மகன் பாலமுருகன்(35) கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமியிடம் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, கொலை செய்யப்பட்ட வசந்திக்கும், பாலமுருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறும், முன்விரோதமும் இருந்துள்ளது. 17ஆம் தேதி வசந்தி வழுத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த மாமரத்தின் மாங்காய்கள் காணாமல் போனதாக பாலமுருகனை சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், அன்றிரவு 9.30 மணி அளவில் இரும்பு ராடால் வசந்தியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் ராடை பூமிக்குள் புதைத்துவிட்டு, அவரது வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை திருடிச் சென்று கைரேகை தெரியாமல் இருப்பதற்காக ஈரத்துணியால் துடைத்துவிட்டு நகையை மண்ணிற்குள் புதைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.