தஞ்சாவூரில் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பிரபலமான இந்தப் பேராலயத்திற்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள் வந்து மாதாவைத் தரிசிப்பது வழக்கம் .
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேராலயத்தில் உள்ள அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டுள்ளன. பேராலயத்திற்கு வரும் அனைத்துப் பக்தர்களும் கை, கால்களைக் கழுவிய பிறகு, ஒரு வழிப்பாதையில் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து பேராலயத்தின் பொருளாளர் கூறுகையில், "கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பேராலயத்தில் உள்ள புனித பூமி, அருங்காட்சியகம் ஆகியவை மூடப்பட்டுள்ளன. மக்கள் மாதாவைத் தரிசித்தவுடன், உடனடியாக வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆலயத்தில் தங்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார்.
இதையும் படிங்க: சென்னையின் நிலை என்ன? - கோவிட்-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள்