தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர்; "பாசிச பாஜக ஒன்றிய அரசு நாட்டையே சீரழித்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் மணிப்பூர் மாநிலம். நான்கு மாதத்திற்கு மேலாக ஒரு மாநிலம் பற்றி எரிகிறது. நாடாளுமன்றத்திற்கு வரவே பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம். நீட் குறித்து சட்டமன்றத்தில் ஒருமுறை அல்ல இரண்டு முறை மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம், ஆனால் அவர் திருப்பி அனுப்பினார். உடனடியாக நமது முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். நீட் தேர்வை ஒழிக்க ஒரு உதயநிதி பத்தாது, ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும். தலைவரின் அனுமதியை பெற்று விரைவில் அடுத்த போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வு ரத்து என்ற உத்தரவாதத்தை அளித்தால் கூட்டணிக்கு வருகிறோம் என்று அதிமுகவால் சொல்ல முடிந்ததா?. உதாரணத்திற்கு வீட்டிற்கு அடிக்கடி விஷ பாம்பு வந்து கொண்டு இருந்தது. அதனை அடித்து வெளியே போட்டாலும், மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் மற்றொறு விஷ பாம்பு வந்தது. வீட்டிற்கு வெளியே வந்த பார்த்த போது தான் குப்பை, புதர் மண்டி இருந்துள்ளது. குப்பைக்குள் ஒளிந்து கொண்டு தான் அந்த பாம்பு வீட்டிற்குள் வந்துள்ளது. குப்பையை ஒழித்தால் தான் பாம்பை ஒழிக்க முடியும்.
அதேபோல் வீடு என்பது தமிழ்நாடு, குப்பை என்பது அதிமுக, விஷ பாம்பு என்பது பாஜக, எனவே அதிமுக என்ற குப்பையை ஒழித்தால் தான், விஷ பாம்பு என்ற பாஜகவை ஒழிக்க முடியும். 2021 தேர்தலில் தமிழகத்தில் இருந்த அடிமைகளை துரத்தி அடித்தது போல், 2024 தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் சேர்த்து விரட்டுவோம்” என்று பேசினார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சாவூர் மாவட்ட திமுக சார்பில் ரூ.30 லட்சம் இளைஞரணி மாநில மாநாடு நிதியாக வழங்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் எம்பிக்கள் பழநிமாணிக்கம், கல்யாணசுந்தரம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Aiadmk Case: பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மீண்டும் வெற்றி.. தீர்ப்பின் முழு விபரம், ஓபிஎஸ் பதில் என்ன?