தஞ்சை வைரம் கோ & ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோ & ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது.
சம்பாவும் இலக்கை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் குறுஅறுவடை பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 267 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
நேற்று (அக். 11) விடுமுறை தினம் என்றாலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மட்டும் 5,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உர தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2,000 டன் உரம் வந்துள்ளது. அவை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 5,600 பேர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 1.6 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் 85 விழுக்காடு அதாவது ரூ. 1.3 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதுவரை பணியாளர்கள் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க... பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி: ரூ.30 லட்சம் வசூல்