தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தினை தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக இரண்டு நாள் கொண்டாடுவது வழக்கம். அவ்விழாவில், நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், ராஜராஜசோழன் விருது வழங்கும் விழா, திருவீதி உலா எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக வரும் 26ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சதய விழாவினை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிகழ்ச்சிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சதய விழாவிற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.