தஞ்சாவூர்: பந்தநல்லூரைச் சேர்ந்தவர் கோகுல். இவர் புதிதாக டாடா ஏஸ் வாகனம் ஒன்றை வாங்கி உள்ளார். எனவே புதிதாக வாங்கிய டாடா ஏஸ் வாகனத்தில், தனது குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்குச் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் இன்று (பிப்.20) காலை கல்லணை சாலை வழியாக பந்தநல்லூருக்குத் திரும்பி வந்தபோது, வைத்தியநாதன் பேட்டை அருகே சாலை வளைவில் திரும்பி உள்ளார்.
அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மணல் லாரி டாடா ஏஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் டாடா ஏஸ் வாகனத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ச்சியாக இந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அதேநேரம் தற்போதும் 10 பேருக்குப் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் சாலையில் அணி வகுத்து நின்றது. இதன் காரணமாக, அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: அதிவேகமாக தடுப்பில் மோதி கவிழ்ந்த சொகுசுப்பேருந்து