தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி விஜயமண்டபத் தெரு, மிஷன் சாலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. மொத்தம் 10,500 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. இந்த வீட்டில் தற்போது சசிகலாவின் உறவினர் மனோகரன் என்பவர் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வீட்டுக்குக் கடந்த 17ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பாணை வழங்கியது. அதில், இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுமானம், அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இக்கட்டடம், பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கும், பள்ளிக்கும் அருகில் உள்ளது. எனவே, இந்த அபாயகரமான கட்டடத்தை எந்த விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு கட்டடத்தைத் தகர்க்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.
அதில், 15 நாட்களுக்குள் கட்டிடத்தை அகற்றாவிட்டால் மாநகராட்சி நிர்வாகமே அதை செய்துவிட்டு அதற்கான செலவு தொகையை வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு முன்பு இக்கட்டடம் மூலம் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான நிவாரணத்தொகை நஷ்டஈடு ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரிடம் பெற்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்’ - அமைச்சர் பாண்டியராஜன்!