தஞ்சாவூர்: ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூரில் இரவை பாசனத்திட்ட நீர் ஏற்றும் இயந்திரம் பழுதானதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
கல்லணை கால்வாய்க்கு உட்பட்ட கண்ணனூர் வாய்க்கால் மூலம் ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, பேரையூர், கீழக்குறிச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த கிராமங்கள் முழுவதும் மேடான பகுதி என்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 1969-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, ஒக்கநாடு கீழையூரில் இரவை பாசனத் திட்டத்தை துவக்கி வைத்தார்.
நீர் ஏற்றும் இயந்திரம் மூலம் மேடான வாய்க்கால் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீர் ஏற்றும் இயந்திரம் பழுதானதால் இரவை பாசனத்திட்டம் செயல்படாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த 20 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இரவை பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நவீன நீர் ஏற்றும் இயந்திரங்கள் வாங்கி, மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீராங்கனை பிரியா மரண வழக்கு: 2 மருத்துவர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை