தஞ்சாவூர்: தேசிய நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்களுக்கு மூவர்ண தேசியக் கொடி வழங்கி மூன்று வர்ணத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைக் கொடுத்து மகிழ்ந்தனர். உலகின் உன்னதமான உறவுகளில் முதன்மையான ஒன்றாகப் பார்க்கப்படுவது நட்பு. எந்தவித ரத்த சொந்தமோ அல்லது எந்த விதமான நேரடி தொடர்பு இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஒருவரை நாம் நண்பர் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
மொழி மதம் இனம் ஆகிய பாகுபாடு இல்லாமல் நண்பர்களாகப் பழகுவது தான் நட்பு. இதேபோல் நிறையத் தலைவர்களும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 6ம் தேதி தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று (ஆகஸ்ட் 6) தஞ்சையில் போக்குவரத்து போலீசார் நண்பர்கள் தினத்தினை கொண்டாடினார்கள்.
காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் வகையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரமேஷ் உள்ளிட்டோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஒட்டி வந்த நபர்களை இடை நிறுத்தினர். அதனையடுத்து அவர்களுக்கு மூவர்ண தேசியக் கொடியினை வழங்கி, மூன்று வர்ணத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைக் கொடுத்து நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்தனர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், “காவல் துறையினருக்குப் பயந்து ஹெல்மெட் அணியாமல், உங்கள் உயிரை காப்பாற்ற ஹெல்மெட் அணிய வேண்டும். உங்களது உறவினர்களிடமும் ஹெல்மெட் அவசியம் குறித்துத் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தி வாழ்த்தி தெரிவித்து இனிப்புகளை வழங்கி அனுப்பினார். இதனால் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்து 90 சதவீதம் பேர் இருசக்கர வாகனம் ஓட்டி வருகின்றனர். மேலும் 100% ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு இனிப்பு, மகளிருக்கு புடவை, வெள்ளி நாணயம் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இடம்பெறும் தஞ்சாவூரில் சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி!