தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு மஹா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
அதனை முன்னிட்டு பெருவுடையாருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு, உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. மஹா சிவராத்திரி விழா நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதில் தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதேபோல் தஞ்சை மாநகராட்சி திலகர் திடலில் அரசு சார்பில் சிவராத்திரி விழா கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மங்கள இசை, பட்டிமன்றம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி குச்சிப்புடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இரவு பெருவுடையாருக்கு 4 கால பூஜை அபிஷேகம் ஆகியவை விடிய விடிய நடைபெறும்.
இதையும் படிங்க: Maha Shivratri: மகா சிவராத்திரி வரலாறு கூறுவது என்ன?