தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி, கரம்பயம் பகுதிகளில் செயல்பட்டுவரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்து 153 ஊரக குடியிருப்புகள், அதிரம்பட்டினம், பேராவூரணி, பெருமகளுர் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அணைக்குடி, வீரமாங்குடி, செம்மங்குடி ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணறுகளிலிருந்து நீர் பெறப்பட்டு, வீரமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து சூரக்கோட்டை, புதூர் பகுதிகளிலுள்ள தரைமட்ட தொட்டிகள் வழியாக கரம்பயம் பகுதியில் உள்ள நீர் உந்து தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கரம்பயம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சுமார் 604.52 கி.மீ., நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலமாக மூன்று வழித்தடங்களில் கொண்டு செல்லப்பட்டு, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 180 தரைமட்ட தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.
180 தரைமட்ட தொட்டிகளில் சேகரிக்கப்படும் குடிநீர் சுமார் ஆயிரத்து 49 கி.மீ., நீளமுள்ள நீரூட்டும் குழாய் மூலம் ஆயிரத்து 153 ஊரக குடியிருப்புகள், மூன்று பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே பயனிலுள்ள ஆயிரத்து 291 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறுகள், வீரமாங்குடியில் அமைந்துள்ள பொது நீர் சேகரிப்பு தொட்டி, கரம்பயம் பகுதியில் அமைந்துள்ள நீர் உந்து தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மின் இயந்திரங்களை முறையாக பராமரித்திடவும், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்திடவும் இது தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். நீரேற்று நிலையங்கள், நீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் செல்லும் பாதைகளை கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், நிர்வாகப் பொறியாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் சேகர், தங்கவேல், உதவி பொறியாளர் விவேகானந்தன், திட்ட இயக்குனர் முரளி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ராட்சத குழாய் உடைப்பு - உப்புநீரில் கலக்கும் குடிநீர்