தஞ்சை: தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் அருங்காட்சியகம், தஞ்சாவூர் அரண்மனைக் கலைக்கூடம், தமிழ்நாடு ஹோட்டல், பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, சுற்றுலா மேம்பாட்டு கழக பொது மேலாளர் பாரதி தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "இந்தியாவில் முதன்முதலாக தமிழ் வளர்ச்சி, பண்பாடு, கலை ஆகியவை தஞ்சாவூரில்தான் தோற்றுவிக்கப்பட்டு வளர்ந்திருக்கும் என நினைக்கிறேன் - அந்த அளவுக்கு அருங்காட்சியகம் இருக்கிறது. கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில் ஒரு கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். பின்னர் கரோனா ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஆண்டு 62 லட்சம் பேர் வந்துள்ளனர். தற்போது கடந்த நான்கு மாத காலத்தில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். இந்த வருடம் ஒரு கோடி பேருக்கும் மேல் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், சாதாரண வியாபாரிகள், வழிகாட்டிகள், ஓட்டுநர்கள் போன்றோருக்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் தனிமனித வருவாய் உயர்கிறது, தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டு வருகிறது. பூம்புகாரில் 73 கோடி ரூபாய் மதிப்பிலும், பிச்சாவரத்தில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில்தான் கோவில்கள் அதிகமாக உள்ளன. கலைநயமிக்க கோவில்கள் இங்கு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சிற்பக்கலை கொண்ட கோயில்கள் போல வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மருத்துவ சுற்றுலா கூட்டம் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டது. இதில் 22 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி கிடைக்கிறது. அதனால், சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால், இங்கு தங்குமிடம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: TN Rains: கனமழை எச்சரிக்கை; ஆட்சியர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவுரை!