தமிழக விவசாயிகள் தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என டெல்லி வரை சென்று அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். ஆனாலும் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. அப்பொழுதே நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்து போராடுவோம் என அறிவித்தனர். விவசாயிகள் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி நிற்கும் வாரணாசி தொகுதியில் 111 பேர் போட்டியிட உள்ளனர்.
இதேபோல் தமிழகத்திலுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், கிராம கோயில் பூசாரிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்கள் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அரசும், எதிர்க்கட்சிகளும் இவர்களின் போராட்டத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்து உள்ள இவர்கள் தங்களின் பலத்தினை அரசியல் கட்சிகளுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டுமென திட்டமிட்டுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் ஒரு மினி சட்டமன்றத் தேர்தலாக அமைந்துள்ளது. 18 சட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி மாபெரும் வெற்றியாக கருதப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை நடத்துவது என முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் கூறும்போது, எங்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு தங்களின் பலத்தினை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காண்பிக்க உள்ளோம். இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோமா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்களின் வலிமையை அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்து பாடம் புகட்ட உள்ளோம். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக செல்வராஜ் நாளை மனுதாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார், எனக் கூறினார்.