தஞ்சாவூர்: கடந்த ஆகஸ்ட் 15, 1947 ஆண்டு நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸ் பிரசிடென்சி, மெட்ராஸ் மாகாணமாக மாறியது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 26ஆம் தேதி 1950இல் இந்தியா குடியரசாக மாறியது. அதன் பின்னர், இந்திய அரசால் மெட்ராஸ் மாகாணம் மாநிலமாக உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மறு சீரமைப்புச் சட்டம் 1956இன் வளைவாக மாநிலத்தின் எல்லைகள் மொழி வாரியாக சீரமைக்கப்பட்டன.
அப்படி மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மாநில உருவாக்க நாளாக கொண்டாடுகின்றனர். பின் தியாகி சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 1967ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் போராடியதைத் தொடர்ந்து, மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தன.
இதனையடுத்து அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை தலைமையிலான அரசு, மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மதராஸ் (மெட்ராஸ்) மாநிலம் என்ற பெயர் கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா சட்டப்பேரவையில் 'தமிழ்நாடு' என பெயர் சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் அரசு சார்பில் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சாரண, சாரணிய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேண்ட் வாத்தியங்களை இசைக்க தமிழ்நாடு நாள் விழா குறித்த பதாகைகளை கொண்டு சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த பேரணி தஞ்சை அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது. பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்தியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சை), மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் காவல் துறை டிஎஸ்பி உள்பட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தில் சென்றனர்.
இதையும் படிங்க: Ponmudi: அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் தொலைபேசியில் பேச்சு!