தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று முன்தினம் (அக்.15) காலை முதல் இரவு வரை பாபநாசம் வட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின்னர் அரசு சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு ஆதனூர் பகுதிக்கு வரும்போது, கடந்த 321 நாட்களாக திருமணங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு வழங்கப்பட்டதற்கான நிலுவைத் தொகை, ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் மோசடியாக பெற்ற கடன் தொகை என ரூ.400 கோடி ஆகியவற்றுக்காக இரவு பகலாக போராடி வரும் கரும்பு விவசாயிகள், திடீரென அமைச்சர் அன்பின் மகேஷின் காரை வழிமறித்து, அவரை முற்றுகையிட்டனர்.
அப்போது அவரிடம் நேரடியாக தங்களது கோரிக்கை குறித்தும், போராட்டம் குறித்தும் எடுத்துரைத்து நியாயம் கேட்டனர். அதற்கு அவர் இதற்காக வருத்தப்படுகிறேன் என தெரிவித்தார். மேலும், நிலுவைத் தொகையை தனியார் நிர்வாகம் வழங்க முன்வராவிட்டால், ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஆலையை அரசு ஏற்க முடியாது என அமைச்சர் தெரிவித்த நிலையில், அதற்கு கரும்பு விவசாயிகள், அப்படி என்றால் ஆணைக்குரிய பணத்தை நாங்கள் அளித்து விடுகிறோம். ஆலையே கரும்பு விவசாயிகளிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றனர்.
அதற்கு அமைச்சர், அப்படி என்றால் அதனை எழுத்துப்பூர்வமாக கோரிக்கையாக வழங்குங்கள் எனக் கூறி புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 8,833 பேர் தகுதி நீக்கம்.. அரசு கூறும் காரணம் என்ன?